பிப்ரவரியில் தொடங்குகிறது கோடை.. 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என தகவல்..!
பொதுவாக, தமிழகத்தில் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் தான் கோடை காலம் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே கோடை காலம் தொடங்கி விட்டதாக தெரிகிறது.
கடந்த சில நாட்களாக படிப்படியாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பிப்ரவரி 23, 24 ஆகிய இரண்டு நாட்களில் வழக்கத்தை விட நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் சில இடங்களில் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 22ஆம் தேதி வெப்பநிலை அதிகரிக்க தொடங்கும் என்றும், பிப்ரவரி 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், மற்றபடி மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Siva