தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்!
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் கொளுத்தி வரும் நிலையில் திடீரென வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது என்றும் இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எப்ரல் 8, 9, 10, 11 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்கள், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய கூடும்.
எப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் திருப்பூர், கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.