தன்னார்வலர்களுக்கு தடையா? எதிர்கட்சியினருக்கு குட்டு வைத்த அரசு!!
தன்னார்வலர்கள் யாருக்கும் தடை விதிக்கவில்லை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவே அறிவுறுத்தல் என தமிழக அரசு விளக்கம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸினால் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸினால் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 1075 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக அரசு அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனை அடுத்து நேற்று திடீரென ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியார் அமைப்புகள், தன்னார்வலர்கள் நேரடியாக உணவு வழங்க தடை விதித்துள்ளது.
தன்னார்வலர்கள் உணவு வழங்க விரும்பினால் மாவட்ட நிர்வாகத்திடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் அனுமதி பெற்று அவர்களுடைய ஒத்துழைப்பில் உணவு வழங்கலாம் என அறிவித்துள்ளது.
இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
எனவே, தமிழக அரசு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு... ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை. தன்னார்வலர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளை அணுகி உதவி செய்ய மட்டுமே அறிவுறத்தப்பட்டது.
தன்னார்வலர்கள் அடிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் விரும்பும் பகுதியில் உதவிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டும். தன்னார்வலர்கள் உதவி செய்வதை அரசு தடுக்கவில்லை அதற்கான வழிமுறைகளை மட்டுமே மாற்றியுள்ளது.
கொரோனா பரவை தடுப்பதற்காக மட்டுமே இந்த வழிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத்தான் தன்னார்வலர்கள் உதவி செய்ய தடை என ஸ்டாலின், வைகோ, கே.எஸ்.அழகிரி உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.