செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 டிசம்பர் 2024 (13:01 IST)

அதானி என்னை சந்திக்கவும் இல்லை, நான் அவரைப் பார்க்கவும் இல்லை: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

தமிழக முதல்வரை அதானி ரகசியமாக சந்தித்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில், "அதானி என்னை சந்திக்கவும் இல்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை" என சட்டமன்றத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டசபை நேற்று தொடங்கிய நிலையில், கேள்வி நேரம் முடிந்ததும் நிதியாண்டில் ஏற்படும் கூடுதல் செலவுக்காக ரூபாய் 3531 கோடி துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனை அடுத்து டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய கூறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் கூட்டம் தொடங்கிய போது, முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து எம்எல்ஏக்கள் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அந்த வகையில் அதானி விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு தொடர்பு உள்ளதா என பாமக எம்எல்ஏ ஜிகே மணி கேள்வி எழுப்பினார். அதற்கு முதலமைச்சர் பதிலளிக்கும்போது, "தமிழ்நாட்டில் அதானி குழுமத்தின் தொழில் முதலீடு கொடுத்து பொதுவெளியில் வரும் புகார்கள் தவறானது. அமைச்சர் செந்தில் பாலாஜி இதுகுறித்து ஏற்கனவே விளக்கி உள்ளார். என்னை அதானி சந்திக்கவும் இல்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை. இதைவிட விளக்கம் தேவையா?" என்று கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் முழக்கம் எழுப்பி வருகின்றன. அதை பாமக ஆதரித்து பேச தயாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.


Edited by Siva