சுகோய் விமானம், பிரமோஸ் ஏவுகணை: ஒரே நாளில் பிரபலமான தஞ்சை விமானப்படை தளம்!
தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் இந்தியாவின் பிரபல போர் விமானமான சுகோய் இணைக்கப்பட்டதன் மூலம் தென்னிந்தியாவின் சக்திவாய்ந்த விமானப்படை தளமாக தஞ்சாவூர் மாறியிருக்கிறது.
ரஷ்யாவின் சுகோய் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா சுகோய் 30எம்கேஐ ரக போர் விமானங்களை 2002 முதல் தயாரித்து இந்திய விமானப் படையில் பயன்படுத்தி வருகிறது. மணிக்கு 2 ஆயிரத்து 120 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த போர் விமானமானது இந்திய ராணுவத்தில் வடக்கு படை தளங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்தியாவால் உருவாக்கப்பட்ட ஒலியை விட வேகமாக பயணிக்கும் ஆற்றல் கொண்ட ப்ரமோஸ் சூப்பர் சோனிக் ரக ஏவுகணைகளை தாங்கி சென்று இலக்கை தாக்கும் வல்லமை பெற்றவை சுகோய் போர் விமானங்கள்.
வானிலிருந்து வான் இலக்குகளை தாக்குதல், வானிலிருந்து பூமியில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்குதல் போன்றவற்றிலும் சிறப்பு வாய்ந்தது சுகோய் விமானம். சுகோய் விமான படைப்பிரிவை தென்னிந்தியாவில் ஏற்படுத்தும் விதமாக கடந்த 2013ம் ஆண்டிலிருந்து தஞ்சை விமானப்படை தளத்தில் சுகோய் விமான இயக்க பயிற்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக சுகோய் விமானப்டை பிரிவு தஞ்சை விமானப்படை தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தென்னிந்தியாவில் சுகோய் ரக நவீன விமானங்கள் கொண்ட முதல் படைதளமாய் தஞ்சாவூர் விமானப்படை தளம் பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.