புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2024 (12:15 IST)

ராகுலின் பாதுகாப்பை பலப்படுத்துக.! மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

Rahul Stalin
எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்திக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பை மத்திய அரசு பலப்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியின் ஆதரவாளர்கள் சிலர், ராகுல் காந்தியை தொடர்ந்து மிரட்டும் வகையில் வன்முறை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  ராகுலின் நாக்கை அறுப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என ஷிண்டே சிவசேனா அணியின் எம்.எல்.ஏ கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்நிலையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,  'ராகுல் காந்தி தனது பாட்டிக்கு நேர்ந்த கதியை சந்திக்க நேரிடும் என்று பாஜக தலைவர் ஒருவரின் மிரட்டல் மற்றும் நாக்கை அறுப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என ஷிண்டே சேனா எம்.எல்.ஏ-வின் மிரட்டல் போன்ற ஊடக செய்திகளால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
எனது சகோதரர் ராகுல் காந்தியின் அரசியல் முன்னெடுப்பு, அதிகரிக்கும் மக்கள் ஆதரவு சிலருக்கு கலக்கம் தந்துள்ளது என்றும் இது போன்ற மோசமான மிரட்டல் செயல்களுக்கு வழிவகுக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, மிரட்டல் மற்றும் வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.