1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 8 மே 2016 (16:59 IST)

அதிமுக ஆட்சியில் விவசாயிக்கு ரூ.50ஆயிரம் ‘லாபம்’ கிடைத்த கதை - ஜி.ஆர். விளக்கம்

5 ஏக்கரில் சாகுபடி செய்யாததால்தான் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் லாபம் என்றார். இதுதான் இன்றைக்கு விவசாயிகளின் நிலைமை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

 
"விவசாயத்தை பாதுகாக்க வேண்டு மென்றால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கும், கரும்புக்கும் நியாயவிலை வேண்டும். விவசாயிகளின் சாகுபடிக்கு எவ்வளவு செலவு ஆகிறதோ அதைவிட கூடுதலாக 50 சதவீதம் விலை கொடுத்தால்தான் கட்டுப்படியாகும் என்று மக்கள் நலக்கூட்டணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். அப்படி செய்தால் தான் விவசாயத்தை, விவசாயிகளை பாதுகாக்க முடியும்.
 
விவசாயிகளை பாதுகாப்பதற்கோ, விவசாயத்தை பாதுகாப்பதற்கோ விளைபொருளுக்கு குறிப்பிட்ட விலையை தருவதாக அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்படவில்லை. தமிழ்நாட்டில் 55 சதவீதமான மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளார்கள். விவசாயம் என்பது ஒரு கட்டுப்படியாகாத தொழிலாக மாறி வருகிறது.
 
நான் ஒரு விவசாயியிடம் இந்த ஆண்டு விவசாயத்தில் எவ்வளவு லாபம் என்று கேட்டேன். எனக்கு இந்த ஆண்டு ரூ.50 ஆயிரம் லாபம் என்று அந்த விவசாயி கூறினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை யாரும் லாபம் பற்றி சொல்லவில்லையே; இவர் சொல்கிறாரே என்று அந்த விவசாயியிடம் திருப்பி எப்படி என்று கேட்டேன்.
 
50 ஆயிரம் ரூபாய் லாபம் என்றால் உங்களுக்கு எத்தனை ஏக்கர் நிலம் இருக்கிறது என்று கேட்டேன். 5 ஏக்கர் நிலம் இருக்கிறது என்றார். என்ன சாகுபடி செய்தீர்கள்? என்று கேட்டேன். அந்த விவசாயி சொன்னார், நான் சாகுபடி செய்யாததால்தான் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் லாபம் என்றார். இதுதான் இன்றைக்கு விவசாயிகளின் நிலைமை.
 
தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி-தமாகா அணி ஆட்சிக்கு வரும். விவசாயிகள் கடனை ரத்து செய்யும். விலைவாசியை கட்டுப்படுத்துவது குறித்தும் அதிமுக தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்ல வில்லை. கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் மக்களின் பொருளாதார வளர்ச்சியில் எந்த பயனும் இல்லை. தொழில் வளர்ச்சிக்கு, விவசாய வளர்ச்சிக்கு பயன்படவில்லை.
 
இந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சி மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதை சரிக்கட்டுவதற்காகவே சலுகைகளை அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. அதிமுக தேர்தல் அறிக்கை என்பது தமிழகத்தின் வளர்ச்சிக்கு பயன்படாது. தொழிலாளர்களை, விவசாயிகளை பாதுகாக்க பயன்படாது.
 
ஊழலை ஒழிப்பதற்காக சட்டம் கொண்டுவருவோம் என்று கடந்த ஓராண்டு காலமாக தேமுதிக -மக்கள் நலக்கூட்டணி -தமாகா அணி கூறிவந்தது. இதன் பிறகுதான் அம்மையார் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும் சரி, கருணாநிதி வெளியிட்டுள்ள திமுக அறிக்கையிலும் சரி ஊழலை ஒழிக்க சட்டம் கொண்டுவருவதாக சொல்கிறார்கள். ஜெயலலிதாவாலும், கருணாநிதியாலும் ஒருபோதும் ஊழலை ஒழிக்க முடியாது" என்று கூறியுள்ளார்.