செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (14:34 IST)

ஆட்களை வளைக்கும் அழகிரி : செக் வைக்கும் ஸ்டாலின் : களைகட்டும் திமுக அரசியல்

திமுகவில் ஸ்டாலினின் தலைமையை பிடிக்காதவர்களையும், அவரால் ஓரங்கட்டப்பட்டவர்களையும் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் அழகிரி தரப்பு ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

 
அழகிரியை திமுகவில் இணைக்கும் முடிவில் ஸ்டாலின் இருப்பது போல் தெரியவில்லை. இது அழகிரிக்கும் புரிந்து விட்டது. எனவே, தன்னுடைய பலத்தை காட்டும் வகையில், திமுகவில் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை ஒன்றிணைத்து வருகிற செப்டம்பர் 5ம் தேதி சேப்பாக்கத்தில் இருந்து கருணாநிதி சமாதிவரை ஒரு பிரம்மாண்ட பேரணியை நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார்.
 
அதற்காக, திமுகவில் ஸ்டாலினை பிடிக்காதவர்களையும், அவரால் ஓரங்கப்பட்டவர்களையும் தன் பக்கம் வளைக்கும் முயற்சியில் அழகிரி தரப்பு ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பல வருடங்களாக கட்சியில் இருந்தும் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்களை அழகிரி தரப்பு குறிவைத்துள்ளது.
 
அவர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களிடம் தொலைபேசி வழியாக பேசும் அழகிரி, பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறாராம். அதேபோல், தற்போது பதவியில் இருக்கும் ஸ்டாலின் எதிர்ப்பாளர்களிடமும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். 

 
இதை தெரிந்து கொண்ட ஸ்டாலின் தற்போது திமுகவில் ஓரங்கட்டப்பட்ட பலருக்கும் பதவி கொடுத்து வருகிறாராம். இது திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற போது அவருக்கு வாழ்த்துரை வழங்கியவர்களின் பட்டியலிலேயே எதிரொலித்தது
 
இதில் கும்மிடிப்பூண்டி வேணு மிக முக்கியமானவர். திருவள்ளூர் மாவட்ட செயலளாராக இருந்த வேணு கருணாநிதியிடமே நேரிடையாக வாதாடுபவர். ஆனால், அவரின் வெளிப்படையான செயல்பாடுகள் ஸ்டாலினுக்கு பிடிக்காததால் அவர் ஓரங்கட்டப்பட்டார்.  சில வருடங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட மாவட்ட செயலாளராக அவருக்கு பதவி கொடுக்கப்பட்டது. ஆனால், அவருக்கு பெரியாத முக்கியத்துவம் தரப்படவில்லை. இதுபோலவே ஏ.கே.எஸ் விஜயன், பழனிமாணிக்கம் ஆகியோரும் ஓரங்கட்டப்பட்டிருந்தனர்.
 
ஆனால், இவர்கள் அனைவரும் ஸ்டாலினை வாழ்த்தி பேசும் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இதில்தான் ஸ்டாலின் ராஜ தந்திரம் இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது, தன்னால் ஓரங்கட்டப்பட்டவர்களை வளைக்கும் முயற்சியில் அழகிரி தரப்பு ஈடுபட்டிருப்பதை புரிந்து கொண்டு, அதற்கு செக் வைக்கும் வகையில் ஸ்டாலின் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. இது அழகிரி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
 
இன்று பேட்டியளித்த அழகிரி திமுகவில் என்னை இணைத்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்க தயாராக இருக்கிறேன் என பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.