புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 25 அக்டோபர் 2024 (15:04 IST)

சபாநாயகர் அப்பாவு மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு பின் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக பேசியதாக சபாநாயகர் அப்பாவு மீது சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை  சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
சபாநாயகர் அப்பாவுவின் கருத்துகள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளராக உள்ள பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்
 
புகார்தாரர் தனிப்பட்ட முறையில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். வழக்கை தாக்கல் செய்ய கட்சி அவருக்கு எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். 
 
முன்னதாக சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
 
இது அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
 
Edited by Siva