விரைவில் தமிழ்ப்புதல்வன் திட்டம், அடுத்த 2 ஆண்டுகள் ரொம்ப முக்கியம்! – மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் முதல்வர் மு.க,ஸ்டாலின்!
இன்று மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வென்று திமுக ஆட்சி அமைத்தது. அன்று முதல் தொடர்ந்து பல திட்டங்களை அறிமுகப்படுத்தியதுடன், கவனமாக அதை செயல்படுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த 39 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தலிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது.
அடுத்து சட்டமன்ற தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில் திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசு தனி கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று எதிர்கால திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதில் அவர் பேசியதாவது “அடுத்த இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் முக்கியமான ஆண்டுகள், நலப்பணிகளை சிறப்பாக செய்ய வேண்டியது நமது கடமை. வருவாய்த் துறையில் பட்டா வழங்குதல், சான்றிதழ்களை பெறுவதில் தனி கவனம் செலுத்த வேண்டும். தமிழ்ப்புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை கவனமாக கண்காணிக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
மேலும் “தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருந்தாலும், அது போதாது. போதை பொருள் புழக்கம் சட்டம், ஒழுங்கு மட்டுமல்லாது சமூக பிரச்சினையாகவும் உள்ளது. அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, கட்டமைப்பு மேம்பாடு, அரசு சேவைகள், வேலைவாய்ப்புகள் என மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K