தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.! சீமான் வலியுறுத்தல்.!!
தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் அணையில் தேக்கப்படும் பாசன நீரால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வேளாண் நிலங்கள் பயனடைந்து வருகின்றன. மேலும், ஆற்றுப்படுகையிலுள்ள கிராமங்களின் குடிநீர்த் தேவையும் இதனால் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் கடும் வெப்பநிலை காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து முற்றாக குறைந்துவிட்டது.
தற்போது மீண்டும் மழைபெய்யத் தொடங்கியுள்ள நிலையில் மிகக்குறைவான அளவிலேயே நீர்வரத்து இருந்து வருகிறது. இதற்கிடையே, கர்நாடகாவிலுள்ள தொழிற்சாலைகள் கரிமக் கழிவுநீரை தென்பெண்ணை ஆற்றில் கலக்கச்செய்து வருகின்றன. இதனால் முற்றாக மாசடைந்த ஆற்றுநீரை பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இது குறித்து பலமுறை முறையிட்டும் கழிவுநீரைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது, தென்பெண்ணை ஆற்றுநீரை ஆய்வு செய்ததில் நீரின் காரத்தன்மை மற்றும் அம்மோனியா, நைட்ரேட் ஆகியவற்றின் அளவுகள் அதிகரித்தும், ஆக்சிஜன் அளவு குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக தொழிற்சாலை கழிவுகள் கலப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலக்க அனுமதிக்கும் கர்நாடக அரசைக் கண்டிப்பதுடன், கழிவுநீர் கலப்பதை உடனடியாக நிறுத்தக்கோரி நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.