1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2024 (17:35 IST)

கிட்டத்தட்ட ஜாமீனை நெருங்கிய செந்தில்பாலாஜி! – நாளை ட்விஸ்ட் வைக்குமா அமலாக்கத்துறை?

senthil balaji ed
கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைதான செந்தில்பாலாஜிக்கு கிட்டதட்ட ஜாமீன் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.



தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் செந்தில்பாலாஜி. ஏற்கனவே செந்தில்பாலாஜி மீது அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோதிலிருந்தே சில மோசடி வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. இந்நிலையில் சமீபத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்தி செந்தில்பாலாஜியை கைது செய்தது. கடந்த ஜூலை மாதத்தில் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி இதுநாள் வரை ஜாமீன் கூட கிடைக்காமல் அல்லாடி வருகிறார்.

அவரது உடல்நலத்தை சுட்டிக்காட்டி கோரப்பட்ட ஜாமீன் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சாதாரண ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கூறப்பட்டது. அப்படி தாக்கல் செய்தபோது அவரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வந்தன. மேலும் அமலாக்கத்துறை தரப்பில் அளித்த விளக்கத்தில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் உள்ளதால் வெளியே வந்தால் குறுக்கீடு செய்து சாட்சியங்களை அழிக்கவோ மாற்றவோ முயலக்கூடும் என வாதிட்டதால் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவிற்கு நீதிமன்றத்தில் க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லை.


இந்நிலையில் ஜாமீனுக்காக செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்தே நீக்கப்பட்டு விட்டார். தற்போது அவர் அமைச்சராக இல்லை என்பதை சுட்டிக்காட்டி மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், அவருக்கு ஜாமீன் வேண்டி உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். மேலும் அமலாக்கத்துறை அனைத்து ஆதாரங்களையும் தாக்கல் செய்துவிட்டதாக கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஜாமீன் மனு விவகாரத்தில் அமலாக்கத்துறையின் வாதங்களை கேட்பதற்காக நாளை பிற்பகல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை அமலாக்கத்துறை சார்பில் முக்கியமான வாதங்கள், கோரிக்கைகள் வைக்கப்படாத நிலையில் செந்தில்பாலாஜிக்கு பெரும்பாலும் ஜாமீன் கிடைத்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K