1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (16:11 IST)

100 கோடி வரி ஏய்ப்பு ?- வசமாக சிக்குகிறாரா செந்தில் பாலாஜி?

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.


 

 
தினகரன் பக்கம் சென்றதால், கரூர் அரவக்குறிச்சி தொகுதி செந்தில் பாலாஜிக்கு ஆளும் தரப்பினால் கட்டம் கட்டப்பட்டுள்ளது. அவர் மீதான பழைய புகார்களை தமிழக காவல்துறை தூசி தட்ட ஆரம்பித்துள்ளனர். செந்தில் பாலாஜி விரைவில் கைதாக இருக்கிறார் எனவும், குண்டர் சட்டம் பாய இருக்கிறது எனவும் தகவல்கள் பரவின. 
 
செந்தில் பாலாஜி கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமன ஆணை தருவதாகக் கூறி 6 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வசூலித்ததாக இவர்மீது புகார்கள் எழுந்தன. தற்போது செந்தில் பாலாஜியின் ஆட்டத்தை அடக்க அவர் மீதான மோசடி புகார்களை கையிலெடுக்க ஆரம்பித்துள்ளனர். 
 
அதையடுத்து, செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடு, நிறுவனங்கள் உட்பட அவர் தொடர்புள்ள அனைத்து இடத்திலும் வருமான வரித்துறையினர் கடந்த மூன்று நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். 
 
அவரது நெருங்கிய நண்பர் சரவணனின் நிதி நிறுவனத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் அந்த நிறுவனத்துக்கு சீல் வைத்துள்ளனர். இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணங்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில், கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த விவகாரம் செந்தில் பாலாஜி தரப்பிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.