விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..
அதிமுக எப்போது எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் வந்ததோ அப்போதே கட்சியின் தலைமையாக அவர் மாறிவிட்டார். மேலும் தலைமை பொறுப்பு வேறு யாரிடமும் சென்று விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். தற்போது கட்சியின் பொதுச் செயலாளராகவும் அவரே இருக்கிறார். கட்சி தொடர்பான அனைத்து முடிவுகளையும் அவரே எடுக்கிறார். அவரை முன்னிலைப்படுத்தியே அதிமுக செயல்பட்டு வருகிறது.
அது பிடிக்காமல் ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில் சமீபத்தில் செங்கோட்டையனும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாகவே கட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக சொல்லி அவரை கட்சியியிலிருந்து பழனிச்சாமி நீக்கினார்.
எனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான கருத்துக்களை செங்கோட்டையன் தொடர்ந்து கூறி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கூட எல்லோரையும் கட்சியை விட்டு நீக்கினால் கட்சியில் யாரும் இருக்க மாட்டார்கள். அதிமுகவில் எல்லோரையும் அரவணைத்து செல்லும் பக்குவம் இல்லை என்றெல்லாம் பேட்டி கொடுத்தார். மேலும் அதிமுகவில் ஒருங்கிணைக்க சொன்னதே பாஜகதான் என்றும் அவர் சொல்லியிருந்தார். ஆனால் பாஜக இதை மறுத்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் விரைவில் அதிமுக ஒருங்கிணைக்கப்படும். அது நல்ல முடிவாக இருக்கும். அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. பாஜக எப்போதும் என்னை அழைத்து இது தொடர்பாக பேசியது இல்லை என அவர் கூறியிருக்கிறார்.
மேலும் விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு இப்போது எந்த கருத்தும் சொல்ல முடியாது என செங்கோட்டையன் பதில் கூறியிருக்கிறார்.