திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 31 அக்டோபர் 2017 (17:53 IST)

வலை விரிக்கும் அதிமுக - கட்சி மாறுவாரா செல்வகணபதி?

அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்று ஐக்கியமாகிவிட்ட செல்வகணபதியை மீண்டும் அதிமுகவிற்கு இழுக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.


 

 
அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. அதன் பின் அவர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுக்கப்பட்டது. அதன் பின், திமுக மாநிலத் தேர்தல் பணிக்குழு செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டது.
 
அந்நிலையில்தான், சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள அவரது வீட்டில், கடந்த 27ம் தேதி நள்ளிரவு, மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில், சில வாகனங்கள் சேதமடைந்தன. இது திமுகவின் உட்கட்சி பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. செல்வகணபதிக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கியத்துவம் பிடிக்காத சேலத்தின் முக்கிய புள்ளி ஒருவரே இதில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.
 
ஆனால், இது தொடர்பாக திமுக தலைமை எந்த விசாரணையும் நடத்தவில்லையாம். இந்த விவகாரத்தை கண்டும், காணாமல் தலைமை இருப்பது செல்வகணபதிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், பழசை மறந்துவிட்டு மீண்டும் அதிமுகவில் இணையுங்கள். உங்களுக்கு சரியான முக்கியத்துவம் தருகிறோம் என அவருக்கு அழைப்பு சென்றுள்ளதாம். 
 
எனவே, செல்வகணபதி அதிமுகவில் மீண்டும் இணைவாரா அல்லது திமுகவிலேயே தொடர்வாரா என்பது விரைவில் தெரியவரும்.