திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (14:49 IST)

ஈபிஎஸ் முதல்வராவதே லட்சியம் – செல்லூர் ராஜூ!

தினகரன் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில கருத்துக்களை பேசி வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

 
அதிமுகவில் தற்போது ஓபிஎஸ் இபிஎஸ் என இரண்டு பிரிவுகள் ஆகிவிட்டது என்பதும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக குறித்து கருத்து கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதிகாரத்திற்காக யாரை வேண்டுமானாலும் அழிக்க நினைப்பவர் என்றும் தெரிவித்தார்.

மேலும் வரும் காலத்தில் ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து அரசியல் செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒருபோதும் கைகோர்க்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இது குறித்து பேட்டி அளித்தார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அதிமுகவில் பிளவு இல்லை. சிறு சிறு பாதிப்புகள் இருந்தாலும் பெரிதாக கட்சியில் சேதம் இல்லை.

தினகரன் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில கருத்துக்களை பேசி வருகிறார். அதனை பெரிது படுத்த தேவையில்லை. சசிகலா தினகரன் போன்றவர்கள் கூறும் கருத்துகள் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை.

இவர்களின் கருத்துக்கள் எங்களுக்கு பெரிதல்ல. எங்களது ஒரே நோக்கம் மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமியை கொண்டுவர வேண்டும் என்பதுதான் என  தெரிவித்துள்ளார்.