புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 2 மார்ச் 2020 (11:07 IST)

மருத்துவ கல்லூரிகளால் உயிரிழப்புதான் ஏற்படும்! – சர்ச்சையான சீமான் பேச்சு!

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்க உள்ள நிலையில் அதனால் உயிரிழப்புகள்தான் ஏற்படும் என சீமான் பேசியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 11 இடங்களில் கல்லூரி கட்ட நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நட்டு கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் புதியதாக கட்டப்படும் மருத்துவ கல்லூரிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார் சீமான். “தமிழகத்தில் கட்டப்படும் புதிய மருத்துவ கல்லூரிகளால் தமிழக மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை. வட மாநில மாணவர்களே பயனடைவர். வடமாநில மாணவர்கள் தமிழகம் வந்தால் மொழி குழப்பம் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் நிலை உருவாகும்” என கூறியுள்ளார்.

சீமானின் இந்த பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிஏஏ-க்கு எதிராக போராடும் சீமான் சக மாநிலத்தவர் தமிழகம் வருவதை எதிர்ப்பது என்ன நியாயம்? என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். ஆனால் சீமான் பேச்சுக்கு வழக்கம்போல விளக்கம் அளித்த நாம் தமிழர் கட்சியினர் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் உரிமை பறிபோய் விட்டதாகவே சீமான் குறிப்பிட முயன்றுள்ளதாக கூறியுள்ளனர்.