வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (11:41 IST)

தனியார் பால் தொழிற்சாலை நடவடிக்கை - தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை!

தொடர் தொழிலாளர் விரோதபோக்கைக் கடைப்பிடித்து வரும் தனியார் பால் தொழிற்சாலை மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தல். 

 
இது குறித்து அவர் தனது அறிக்கையில் விரிவாக குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு... தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகில் உள்ள கொலசன அள்ளி கிராமத்தில் இயங்கி வரும் ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட் தனியார் பால் தொழிற்சாலையானது உரிய ஊதியம் தராமல் தொழிலாளர் விரோதப்போக்கை கடைப்பிடித்து வருவது அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும். அரசுடன் செய்த ஒப்பந்தத்தைத் துளியும் பொருட்படுத்தாது, உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்களை ஒடுக்கும் தொழிற்சாலை நிர்வாகத்தின் அடாவடிப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
 
ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட் தனியார் பால் தொழிற்சாலை நிர்வாகமானது, தொழிலாளர்கள் மீது எவ்வித அக்கறையுமின்றி அவர்களின் உழைப்பினை உறிஞ்சி வருவதால் அங்குப் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய ஊதியம் தராமலும், ஊதியம் கேட்டு அமைதி வழியில் போராடும் தொழிலாளர்கள் மீதும் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தும் ஆலை நிர்வாகம் தொழிலாளர்களை வாட்டி வதைப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கே எதிரான கொடுஞ்செயலாகும்.
 
தனியார் பால் தொழிற்சாலை இழைக்கும் இத்தகைய கொடுமைகளைத் தாளமுடியாமல், தொழிற்சங்கத்தை நிறுவி போராடிய தொழிலாளர்களை, ஆலை நிர்வாகம் வடமாநிலத்திற்கு கட்டாயப் பணியிட மாற்றம் செய்துள்ள கொடுமையும் அரங்கேறியுள்ளது. பணியிட மாற்றத்தை எதிர்த்து தொழிலாளர் நலத்துறையிடம் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களை மீண்டும் அதே இடத்தில் பணியில் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.
 
ஆனால், அரசின் உத்தரவைச் சிறிதும் மதிக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் தொழிற்சாலை நிர்வாகம் வட மாநிலத்திற்குப் பணியிட மாற்றம் செய்துள்ளது. இதனை எதிர்த்து தொழிலாளர்கள் மீண்டும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுமட்டுமின்றி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தைக்கூட தொழிற்சாலை நிர்வாகம் வழங்க முன்வரவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது.
 
ஆகவே, தனியார் பால் தொழிற்சாலையின் ஈவு இரக்கமற்ற தொழிலாளர் விரோதப்போக்கினை உடனடியாக தடுத்து நிறுத்தும் வகையில், அதன் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும், உரிய ஊதியம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அங்கு பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைத்திட வழிவகைச் செய்திட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.