செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (14:44 IST)

பெரிய அரசியல் கட்சிகளுக்கு செக் வைக்கும் கமல்ஹாசன், சீமான்

மக்களவை தேர்தலுக்கான பாதி வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட நிலையில் தேசிய அளவில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபித்து உள்ளது. மீண்டும் காங்கிரஸ் போன தடவையை விட அதிகமாக பின்னடைவை சந்தித்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டை பொருத்தவரை நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது. பாஜக கூட்டணி பின்னடைவை சந்தித்து காங்கிரஸ், திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியிருக்கிறது. கேரளாவிலும் இதே நிலைதான். இந்த பெரிய கட்சிகளின் மோதலுக்கிடையே வளர்ந்து வரும் சிறிய கட்சிகளை முதன்முறையாக இந்த பாராளுமன்ற தேர்தல் கண்டுகொண்டிருக்கிறது. 
 
பெரும்பாலும் சட்டமன்ற தேர்தலில் ஆர்வம் காட்டும் மாநில கட்சிகள் பாராளுமன்ற தேர்தல்களில் அமைதி காப்பதே வழக்கம். பெரிய மாநில கட்சிகளே பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கும் நிலையில் தனியாக போட்டியிட்டு பெரும்பான்மை காட்டாவிடாலும், எங்களுக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது என காட்டிய கமல்ஹாசனும், சீமானும்தான் இந்த தேர்தலில் கவனிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு இயக்கமாக, ஒரு கட்சியாக பத்து வருடங்களுக்கும் மேலாக அரசியல் பாதையில் பயணித்து தனக்கென சீமான் ஒரு தனி அடையாளத்தை கொண்டு வந்தார். ஆனால் ஒரு சட்டமன்ற தேர்தலில் கூட கலந்துகொள்ளாமல் நேரடியாக நாடாளுமன்ற தேர்தலிலேயே போட்டியிட்டு தற்போது பல இடங்களில் கணிசமான வாக்குகளை ஒரு உடனடி அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார் கமல்ஹாசன். இதே வேகத்தில் அவர் பயணித்தால் சட்ட மன்ற தேர்தலில் பல இடங்களில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆரம்ப காலத்தில் காமெடிக்கு ஆளான சீமான் தற்போது தனது வீரியமான பிரச்சாரத்தின் மூலமாக மக்களை ஈர்த்து வருகிறார். எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் நாற்காலியில் பங்கு கேட்க புதிதாய் இருவர் மிக வேகமாக வளர்ந்து வருகின்றனர் என்பதை மற்ற அரசியல் கட்சிகளும் கவனிக்காமல் இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் மேலும் பல மாற்றங்களை பார்க்ககூடிய சாத்தியம் உள்ளது.