1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 மே 2024 (15:52 IST)

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

பெண் போலீசார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தவறுதான் என்றும் தவறை உணர்ந்துவிட்டேன் என்றும் சவுக்கு சங்கர் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
சவுக்கு சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டி அளித்தபோது பெண் போலீசார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் அவர் தேனியில் கைது செய்யப்பட்ட நிலையில் அதனை அடுத்து அவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார் என்றும் அதனை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் அடுத்தடுத்து சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்தால் மட்டுமே அவர் விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சவுக்கு சங்கர் தற்போது வாக்குமூலம் அளித்திருப்பதாகவும், திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தில் அவதூறாக பேச தன்னை யாரும் தூண்டவில்லை என்றும் பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டேன் என்றும் அது தவறு தான் என்றும் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்த வாக்குமூலத்தை அடுத்து சவுக்கு சங்கர் மீதான வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
Edited by Mahendran