ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash

பாயும் புலியா? பதுங்கும் பூனையா? சசிகலா எண்ட்ரி எப்படி?

#Sasikala என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் என்பது தெரிந்ததே. கடந்த 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த தீர்ப்பு வெளி வந்ததால் அவர் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது. 
 
ஆனால் நன்னடத்தை உள்ளிட்ட ஒருசில காரணங்களால் சசிகலா தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே ரிலீஸ் ஆகி விடுவார் என்று ஒரு சில கருத்துக்கள் வெளியாகியது. இதனை உறுதி செய்வது போல் பாஜக பிரபலம் ஆசீர்வாதம் ஆச்சாரி என்பவர் தனது டுவிட்டரில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த தகவல்களை எதிர்பாருங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவது குறித்து எந்த பரிசீலனையும் இதுவரை இல்லை என்று தெரிவித்துள்ளனர். 
சசிகலாவால் முதல்வர் ஆக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் தற்போது சசிகலாவை அவர் எதிர்க்கும் மன நிலையில் இருப்பதால் சசிகலா விடுதலை ஆகி வந்த உடன் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இதற்கு ஏற்ப இணையவாசிகளும் காலை முதலே #Sasikala என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். இதில் இனி அதிமுக அரசு ஆட்டம் காணும் எனவும், மீண்டும் அதிமுகவினர் தலைகுனியும் பழக்கத்திற்கு மாறவேண்டும் எனவும் குறிப்பிட்டு வருகின்றனர். 
 
வேறுசிலரோ அதிமுக தற்போது பலம் பொருந்தியதாக மாறியுள்ளதால் சசிகலாவால் எதுவும் செய்ய முடியாது என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.