1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 24 மார்ச் 2018 (10:54 IST)

நடராஜனுக்கு படத்திறப்பு விழா ; அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு : சசிகலாவின் திட்டம் என்ன?

சமீபத்தில் மரணமடைந்த சசிகலாவின் கணவர் நடராஜனின் உருவப்படத்தை திறக்கும் நிகழ்ச்சியை சசிகலாவின் குடும்பத்தினர் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 
தனது கணவர் நடராஜன் மரணமடைந்ததால் 15 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா தற்போது தஞ்சையில் உள்ள நடராஜனின் பூர்வீக வீட்டில் தங்கியிருக்கிறார். நடராஜன் தொடர்பான சடங்குகளை அவர் முன்னின்று நடத்தி வருகிறார்.
 
அந்நிலையில், தனது கணவர் நடராஜனின் உருவ சிலையை திறக்க வேண்டும் என சசிகலா ஆசைப்பட்டாராம். மேலும், ஒவ்வொரு வருடமும் நடராஜன் பொங்கல் விழாவை நடத்தும் தஞ்சை தமிழரசி மண்டபத்திலேயே இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என அவர் கூற, வருகிற 30ம் தேதி அந்த விழாவை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிகழ்ச்சியில் அதிமுக, பாஜக கட்சிகளை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து அவர்களை இதில் பங்குபெற வைக்க வேண்டும் என சசிகலா கூற அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். வைகோ, சீமான், திருமாவளவன், நெடுமாறன் உள்ளிட்ட பலருக்கு தினகரனே தொலைப்பேசியில் பேசி அவர்களின் வருகையை உறுதி செய்கிறாராம். திமுக சார்பில் ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனவும், வருபவர்களை உறுதி செய்த பின்பே அழைப்பிதழில் அவர்களின் பெயர் அச்சடிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
சமீபத்தில்தான் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என தனது அணிக்கு பெயர் வைத்தார். தனது கணவர் உருவபட திறப்பு விழா என்றாலும், இந்த நிகழ்ச்சியின் மூலம், மற்ற கட்சிகள் தங்களுடன் இணக்கமாக இருக்கின்றனர் என்ற தோற்றத்தை உருவாக்க வேண்டும் என சசிகலாவும், தினகரனும் கருதுவதாக தெரிகிறது.
 
பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என சசிகலாவிற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது குடும்ப விழா என்றாலும், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் போது அது பொது நிகழ்ச்சியாக மாறிவிடும். எனவே இதில் சசிகலா கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்பது தெரியவில்லை. இது தொடர்பான சட்ட சிக்கலை எப்படி சமாளிப்பது என அவரின் வழக்கறிஞர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.