கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க சசிகலா அடிக்கல் நாட்டினார்
கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க சசிகலா இன்று அடிக்கல் நாட்டினார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின், ஜெயலலிதா மற்றும் சசிகலா இருவரும் கோட நாடு சென்றனர். அதன்பின்னர், 2017- ஆம் ஆண்டு எஸ்டேட் பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை நடந்த பிறகு சசிகலா இங்கு வரவில்லை.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா 7 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டிற்கு நேற்று மாலை வருகை புரிந்தார்.
நேற்றிரவு கோடநாடு எஸ்டேட்டில் ஓய்வெடுத்த சசிகலா, இன்று அந்த பங்களாவில் ஜெயலலிதாவுக்கு சிலை வைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது.
அதன்படி, இன்று கோட நாடு பங்களாவில் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.
மணிமண்டபம் அமையவுள்ள இடத்தில் நடந்த பூமி பூகையில் சசிகலா, இளவரசியின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த பூஜையைத் தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.