ஓபிஎஸ்-க்கு தொடர்ந்து பின்னடைவு! மேல்முறையீட்டு மனு தள்ளுபடி ! உச்சநீதிமன்ற உத்தரவு.!!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11 ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் பொதுச்செயலாளர் தேர்தலும் அறிவிக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஜூலை 11 ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும். பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ்பாபு கடந்த மார்ச் 28-ந் தேதி உத்தரவிட்டார். அந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்
அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்தனர்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதை அடுத்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள சிவில் வழக்குகளை விசாரணை நீதிமன்றம் விரைவில் விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணையிட்டனர்.