1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 2 ஜூலை 2017 (11:14 IST)

தமிழக அரசை புரட்டிப்போடும் சசிகலாவின் அறிக்கை: காத்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள்!

தமிழக அரசை புரட்டிப்போடும் சசிகலாவின் அறிக்கை: காத்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள்!

வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அதிமுக முழுமையாக பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும் என அரசியல் வட்டாரத்தில் மிகவும் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இதனை தடுக்க சசிகலா குடும்பத்தினர் தற்போது தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளனர்.


 
 
முன்னர் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ்-ஐ பாஜக பயன்படுத்தி வந்தது. இறுதியில் ஓபிஎஸ்-ஐ முதல்வர் பதவியில் இருந்து தூக்கினார் சசிகலா. அதன் பின்னரும் ஓபிஎஸுக்கு கொம்பு சீவி சசிகலாவுக்கு குடைச்சல் கொடுத்தே வந்தது பாஜக.
 
தற்போது ஓபிஎஸ் அலை ஓய்ந்துவிட்டதால் எடப்பாடியை தங்களுக்கு சாதகமாக வைத்துக்கொண்டுள்ளனர் மத்தியில் உள்ளவர்கள். எடப்பாடியும் தற்போது தங்கள் பேச்சை கேட்காமல் செயல்படுவது சசிகலா குடும்பத்துக்கு கடும் அதிர்ச்சியாக உள்ளது.
 
தமிழக அரசை கலைக்காமல் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பாஜக இருப்பதால் அவரும் சசிகலா குடும்பத்தை எதிர்க்க ஆரம்பித்துள்ளார். சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் என்பது தான் தற்போது பாஜகவின் எண்ணமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை சசிகலா குடும்பத்துக்கு எதிராக திருப்பி விடுவதே பாஜகவின் முதல் வேலை என பேசப்படுகிறது. இது சசிகலா குடும்பத்துக்கும் நன்றாக தெரியும்.
 
அதே நேரத்தில் பாஜகவுக்கு முக்கிய நோக்கமாக இருப்பது தமிழகத்தில் தாமரை மலர வேண்டும் என்பது தான். எனவே ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தமிழக அரசியலில் பெரும் புயலே கிளம்பும் என தற்போதே கூறப்படுகிறது. பாஜக முழுமையாக அதிமுகவை கைப்பற்றும் என தெரிகிறது. இவற்றை எல்லாம் உன்னிப்பாக கவனித்து வரும் சசிகலா குடும்பத்தினர் சசிகலாவுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
பொதுக்குழுவால் சட்டப்படி தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலாளர் சசிகலாவிடம் தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளன. அதனால் பாஜகவின் பேச்சை கேட்டு சசிகலா குடும்பத்தை எதிர்த்துப் பேசும் நிர்வாகிகள் அனைவரையும் கட்சியில் இருந்து தூக்கவேண்டும் என சசிகலாவிடம் குடும்ப உறுப்பினர்கள் கூறிவருகின்றனர்.
 
மேலும் நம்முடைய ஆதரவில் இருக்கும் எம்எல்ஏக்களுக்கு உறுதியளித்தபடி அமைச்சர் பதவி வழங்கிவிட்டு நமக்கு எதிராக உள்ள அனைத்து அமைச்சர்களையும் மாற்ற வேண்டும். இது தொடர்பாக சசிகலாவிடம் இருந்து அறிக்கை வந்தால்தான் கட்சி பாஜக கைக்கு போகாமல் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என சசிகலா குடும்பத்தினர் அவரிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பான சசிகலாவின் அறிக்கைக்காகவும் அவர்கள் காத்திருக்கின்றனர்.