செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (08:02 IST)

1.45 மணி நேரம் நடந்த சசிகலா-சந்திரலேகா சந்திப்பு: தகவல் அறியும் சட்டத்தால் அம்பலம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை, தினகரன் உள்பட பல்வேறு தரப்பினர் சந்தித்து வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சமீபத்தில் பாஜக பிரமுகர் சுப்பிரமணியசாமிக்கு நெருக்கமானவரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா சந்தித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த சந்திப்பு குறித்து இரு தரப்பினரும் மறுத்து வந்தனர்
 
இந்த நிலையில் சமூக சேவகர் நரசிங்கமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இது குறித்து கேள்வி எழுப்பி நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடந்தது உண்மை என கர்நாடக சிறைத்துறையினர் பதிலளித்துள்ளனர்.
 
கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை சசிகலாவை 36 பார்வையாளர்கள் சந்தித்ததாகவும், அதில் டிடிவிதினகரன் ஏழுமுறை சந்தித்ததாகவும், அவருக்கு அடுத்ததாக சசிகலாவின் உறவினர்கள் ராமச்சந்திரன் 6 முறையும், கமலா என்பவர் 5 முறையும், சிவகுமார் நான்கு முறையும் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 
 
மேலும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி சசிகலாவை நண்பர் என்ற முறையில் சந்தித்ததாகவும், இந்த சந்திப்பு 1.45 மணி நேரம் வரை நீடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து சசிகலா - சந்திரலேகா சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பில் என்ன பேசி இருக்கலாம் என்ற யூகம் பல்வேறு விதங்களில் எழுப்பப்பட்டு வருகிறது 
சசிகலாவுக்கு ஆதரவு அளித்து அவரை விரைவில் வெளியே கொண்டுவர பாஜக முயற்சித்ததாக வெளிவந்துள்ள செய்திகள் இதன் மூலம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுக மற்றும் அமமுகவை இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடும் என்றும், ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி வைத்து வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்கொள்ள பாஜக திட்டம் தீட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரை நன்னடத்தை விதிகளின் படி முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்றும் சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். இருப்பினும் மத்திய, மாநில அரசு கையில் இருப்பதால் இந்த விஷயத்தில் பாஜக மேலிடம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்