ஆன்மீகப் பணிகளை மீண்டும் தொடங்கினார் சத்குரு!
தென் கிழக்கு ஆசியாவின் ஆன்மீக அம்சங்களை ஆராய்வதற்காக இந்தோனேஷியா பயணம்
மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஒரு மாதம் ஆன நிலையில் சத்குரு அவர்கள் தனது பணிகளை மீண்டும் தொடங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த பிறகு, இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவிற்கு இடையிலான ஆன்மீக மற்றும் கலாச்சார தொடர்புகளை அறிந்து கொள்வதற்காக சத்குரு நேற்று (ஏப்ரல் 19) இந்தோனேஷியா சென்றடைந்தார்.
இந்த 10 நாள் பயணத்தில் கம்போடியா உட்பட பல்வேறு இடங்களில் உள்ள ஆன்மீக ஸ்தலங்களுக்கு சத்குரு செல்ல உள்ளார். அந்நாட்டின் தலைநகரான பாலியில் இந்தோனேசியாவின் சுற்றுலா துறை அமைச்சர் திரு. சாண்டியகோ யுனோ மற்றும் அவருடைய குழுவினர், பாலியில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரி டாக்டர். சஷாங் விக்ரம் ஆகியோர் சத்குருவிற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
https://x.com/ishafoundation/status/1781310532127277422
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான வரலாற்று தொடர்புகள் குறித்து சுற்றுலா துறை அமைச்சருடன் சத்குரு உரையாடும் போது ஒடிசாவின் பாலி ஜாத்ரா என்னும் திருவிழாவை மேற்கோள் காட்டி பேசினார். இத்திருவிழா பாலி நகருடனான ஒடிசா மக்களின் கடந்த கால தொடர்புகளை நினைவு கூறும் விதமாக ஒடிசாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது, ஒடிசா மக்கள் தங்கள் முன்னோர்கள் பாலிக்கு மேற்கொண்ட பயணத்தின் அடையாளமாக, மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் வண்ண காகிதங்கள் மற்றும் உலர்ந்த வாழை மரப்பட்டைகளை கொண்டு சிறிய பொம்மை படகுகளை செய்து மிதக்க விடுவார்கள்.
ஆன்மீக ஸ்தலங்களை சிறப்பாக பராமரித்து வருவதற்காக இந்தோனிஷியாவை பாராட்டிய சத்குரு அவர்கள், இந்த ஆன்மீக அம்சங்கள் தான் இந்தோனிஷியாவிற்கு மக்களை ஈர்க்கும் காரணமாக மாற வேண்டும் என கூறினார்.
இப்பயணத்தில் பாலியில் உள்ள பேஷாக் மற்றும் திர்தாம்புல் கோவில்கள் உட்பட பல்வேறு தொன்மையான சக்திவாய்ந்த ஆன்மீக ஸ்தலங்களுக்கு சத்குரு செல்ல உள்ளார். மேலும், அந்த கோவில்கள் மற்றும் கலாச்சாரத்தின் பின்னுள்ள அறிவியல் அம்சங்கள் குறித்து சத்குரு ஆராய உள்ளார். சத்குருவின் வீடியோக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து பார்த்து வரும் கோடிக்கணக்கான மக்களுக்கு சத்குருவின் இந்தோனேசியா மற்றும் கம்போடியா பயணம் பல்வேறு ஆழமான அம்சங்களை அறிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும். சத்குருவின் வீடியோக்கள் கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் 437 கோடி பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிட்டுள்ளது.