சென்னை அயனாவரத்தில் பிரபல ரவுடியை 4 பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி படுகொலை செய்துள்ளது.
சென்னை அடுத்துள்ள ஆவடி பூம்பொழில் நகரை சேர்ந்தவர் கார்த்திக். பிரபல ரவுடியான இவர், ஓட்டேரியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டில் குடியிருந்தபோது, அங்கு ஒரு நபரை வெட்டி கொலை செய்துள்ளார்.
இந்த கொலை சமபவத்தால், கார்த்திக்கை பழி வாங்க, அவரது எதிரிகள் உரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், ஓட்டேரி சந்நியாசிபுரத்திலுள்ள ஒரு நண்பரை பார்ப்பதற்காக கார்த்திக் சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வந்தது.
அந்த கும்பல் கார்த்திக்கை சுற்றி வளைத்தது. அப்போது, அவர்களின் பிடியிலிருந்து கார்த்திக் தப்பி ஓடினார்.
அந்த கும்பல் கார்த்திக்கை துரத்திச் சென்றது. அப்போது, கார்த்திக் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 4ஆவது மாடிக்கு ஓடினார்.
அவரை துரத்திச் சென்ற கும்பல் 4 ஆவது மாடியில் திறந்தவெளி பகுதியில் கார்த்திக்கை சுற்றி வளைத்து, கார்த்திக்கை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதில் கார்த்திக்கின் தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது. இதனால், கார்த்திக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனால், கார்த்திக் இறந்துவிட்டதாகக் கருதி அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது.
இந்நிலையில், இதைப் பார்த்த அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். தங்களது மாடியில் ஒருவர் வெட்டுபட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, அயனாவரம் காவல் நிலையத்துக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரவுடி கார்த்திக்கை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனனின்றி கார்த்திக் உயிரிழந்தார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.