வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2023 (14:21 IST)

விஜயகாந்த் பெயரில் சாலை.. புதிய விருது! - தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வைக்கும் கோரிக்கை!

vijayakanth
மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு அவரது சொந்த ஊரில் சிலை வைக்க வேண்டும் என்றும், அவரது பெயரில் புதிய விருது வழங்க வேண்டும் என்றும் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.



இது தொடர்பாக தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக சுமார் 40 ஆண்டு காலம், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை  ஆரம்பித்து தமிழக அரசியலில்  18 ஆண்டு காலமும் சிறப்பாக செயல்பட்டவரும், தமிழக சட்டப்பேரவையில் இரண்டு முறை உறுப்பினராகவும், ஒரு முறை எதிர் கட்சி தலைவராகவும், கேப்டன் என்று  எல்லோராலும் அன்பாக அழைக்கபட்டவருமான திரு.விஜயகாந்த் அவர்கள் நேற்று(28 டிசம்பர் 2023) உடல் நலமின்றி  காலமானார்.

அவர் மறைவுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள்  சங்கம்  சார்பில் நேரில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு  ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந் நிலையில் தமிழ்நாடு அரசுக்கு எங்கள் சங்கம் சார்பில் முக்கியமான 3 கோரிக்கைகள் கீழ் வருமாறு வைக்கிறோம்:

1. மறைந்த திரு.'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் வசித்து வந்த சென்னை சாலிகிராமம் அல்லது விருகம்பாக்கம்  பகுதியில்  உள்ள பிரதான சாலைக்கு 'கேப்டன்' விஜயகாந்த் சாலை அல்லது 'புரட்சிக்கலைஞர்' விஜயகாந்த் சாலை என பெயரிட வேண்டும்.

2. தமிழக அரசால் வழங்கப்படும் திரைத்துறை விருதுகளில், இனி 'கேப்டன்' விஜயகாந்த் விருது அல்லது 'புரட்சிக்கலைஞர்' விஜயகாந்த் பெயரில் சிறப்பான விருது வழங்க ஆவண செய்ய வேண்டும் .

3.  மறைந்த திரு.'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் பிறந்த மதுரை மாவட்ட தலைநகரான மதுரையில் 'கேப்டன்' விஜய்காந்த் அவர்களின் முழு உருவ சிலை ஒன்றை அரசு சார்பில் நிறுவ வேண்டும்.

திரைத் துறையிலும் அரசியலிலும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் செய்த காலத்தால் அழியாத சாதனைகளை பறை சாற்றும் விதமாக,  இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வர். திரு ஸ்டாலின் அவர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி அவர்கள், மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. வெள்ளக்கோயில் சாமிநாதன் அவர்கள், சென்னை மேயர் திருமதி ப்ரியா ஆகியோருக்கு வேண்டு கோளாக முன் வைக்கிறோம்

நன்றி.