செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 ஜனவரி 2024 (12:13 IST)

காணும் பொங்கலுக்கு மெரினா பீச் போக கட்டுப்பாடுகள்! – முழு விவரம் உள்ளே!

சென்னையில் நாளை காணும் பொங்கலில் ஏராளமான மக்கள் கடற்கரையில் கூடுவார்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் சுருக்க வடிவம்:

காணும் பொங்கலையொட்டி சென்னை மாநகர் முழுவதும் காவல் ஆணையர் சந்தீப் ரத்தோர் உத்தரவின் பேரில் 15,500 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். உடன் 1500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு பாதையில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. கடற்கரையில் 200 நீச்சல் வீரர்கள் மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் வைக்கப்படுவர்.


உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வர 12 இடங்களில் கண்கானிப்பு கோபுரங்களும், கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படும். அவர்களுக்கான அறிவுரைகள் ஸ்பீக்கர்கள் மூலமாக அடிக்கடி தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் காணும் பொங்கலுக்கு கடற்கரை செல்வோர் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு குழந்தைகளுடன் பலர் வருவார்கள் என்பதால் குழந்தைகள் காணாமல் போன எளிதாக கண்டுபிடிக்க குழந்தைகளுக்கு பெற்றோர் பெயர், அலைபேசி எண்ணுடன் கூடிய அடையாள அட்டை தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் மூலமாக வழங்கப்படும். இதை குழந்தைகள் கைகளில் டேக் ஆக கட்டி அனுப்பி வைக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

மேலும் மெரினா கடற்கரை மற்றும் பெசண்ட் நகர் கடற்கரைகளை கவனிக்க தலா 4 டிரோன் கேமராக்களும் கண்காணிப்பு பணியில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. காணும் பொங்கலை ஒட்டி மக்கள் அதிகளவில் கூடும் பொது இடங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், வணிக வளாகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K