1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated: புதன், 16 நவம்பர் 2022 (21:58 IST)

கரூர் அரசு கலைக்கல்லூரியின் ஆட்சி மன்ற கூட்ட தீர்மானம்

karur
விளையாட்டு வீரர்களுக்கு முரணாக கரூர் அரசு கலைக்கல்லூரியின் ஆட்சி மன்ற கூட்ட தீர்மானம் – பகீர் கிளப்பும் விளையாட்டு துறை வீரர், வீராங்கனைகள் – மு.க.ஸ்டாலினுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தும் அரசு கலைக்கல்லூரி நிர்வாகம்.
 
தமிழக அரசு தற்போது விளையாட்டுத்துறை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையின் கீழ், வேலைவாய்ப்பு பெறுவதற்கு 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை, எளிய மாணவர்கள் பலர் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் 163 அரசுகலைக்கல்லூரிகள், தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் மூலமாக சிறப்பாக இயங்கி வருகின்றது. கரூர் அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், தமிழகத்திலேயே விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குகின்றனர். இந்நிலையில், கரூர் அரசு கலைக்கல்லூரி நிர்வாகம் சார்பில் கடந்த வாரம் நடைபெற்ற ஆட்சி மன்ற கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது பெரும் சர்ச்சையையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. 
 
கரூர் அரசுகலைக்கல்லூரியில் விளையாட்டு பிரிவு கீழ், பல முன்னாள் மாணவர்கள் தமிழகத்தில் காவல்துறையிலும், இந்திய தேசிய இராணுவத்திலும் மட்டுமில்லாது இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி முத்திரை பதித்து வருகின்றனர். இதற்கு காரணம் விளையாட்டு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமென்றால், முறையான பயிற்சி, முறையான உணவு உள்ளிட்டவைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும், இந்நிலையில், கரூர் அரசு கலைக்கல்லூரியில் உள்ள சில பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகம் தரப்பில் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு 15 நாட்கள் மட்டுமே, OD (On Duty) தரப்படும் என்று கூறுகின்றார்கள். இந்த விடுமுறையை மாணவர்களின் கருத்தை கேட்காமல், அரசு விதிமுறைகளை பின்பற்றாமல், கடந்த வாரம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற ஆட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளனர். உதாரணத்திற்கு, ஒரு மாணவர், தமிழக அளவில் தேர்வாகி, வெளி மாநிலங்களுக்கு விளையாட்டிற்காக சென்று வர 10 நாட்கள் ஆகும், இப்படி இருக்கும் சூழலில் 15 நாட்கள் மட்டும் OD (On Duty) ஒதுக்கினால், நாங்கள் எப்படி பயிற்சி பெற முடியும் என்று விளையாட்டுதுறை மாணவர்கள் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், படிப்பும் முக்கியம் விளையாட்டும் முக்கியம் என கூறும் மாணவர்கள், விளையாட்டுத்துறையில் தான் வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அரசு விதிப்படி, கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர்கள் அரசு கலைக்கலைக்கல்லூரிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விளையாட்டுத்திடலில் இருந்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டுமென்று தெளிவான சுற்ற்றிக்கைகள் உயர்கல்வித்துறை மூலம் அனைத்து அரசு கலைக்கல்லூரிகளுக்கும் அனுப்ப பட்டுள்ளது. விளையாட்டு என்பது உடல் நலன், மன நலன் மற்றும் ஒழுக்கம் சார்ந்த விஷயங்கள் மட்டுமல்லாமல், மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய விஷயம் என்பதனை கரூர் அரசு கலைக்கல்லூரியின் நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டுமென்றும், கல்லூரியில், விளையாட்டு பயிற்சிக்கு செல்லும் விளையாட்டு வீர்ர், வீராங்கனைகளை சில பேராசிரியர்கள் தரக்குறைவான வார்த்தைகளை கொண்டு திட்டுவதும், விளையாட்டு பயிற்சிக்கு சென்றால் செல்லும் மாணவ, மாணவிகளை அக மதிப்பெண் மற்றும் செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாமல் செய்து விடுவோம் என்று மிரட்டுகின்றார்கள் என்ற புகாரும் எழுந்துள்ளது. இதனால் பல்வேறு துறைகளில் பயிலும் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் சிலருக்கு பயந்து மாற்றுசான்றிதழ்கள் வாங்கி சென்றுள்ள நிலைமையும் தற்போது நிகழ்ந்து வருகின்றது. தமிழக முதல்வரின் பேரனும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்களது மகன் இன்பநிதி என்பவர் தேசிய கால்பந்து விளையாட்டு வீரர் என்பது எங்களுக்கும் தெரியும் என்று கூறும் விளையாட்டு வீரர்கள், அவரும் காலை மற்றும் மாலைகளில் பயிற்சி பெற்று வருகின்றார். அதுமட்டுமில்லாமல், கல்லூரி கல்வி இயக்குநரும், முன்னாள் பல்கலைக்கழக சிறந்த கால்பந்து விளையாட்டு வீர்ருமான முனைவர் ஈஸ்வரமூர்த்தி ஆவார் என்பதும் எங்களுக்கும் தெரியும் என்கின்றனர் கல்லூரி விளையாட்டு வீரர்கள். மேலும்,  உடனடியாக கல்லூரி நிர்வாகம் உரிய முறையில், உயர்கல்வித்துறையில் விளக்கம் பெற்று மாணவ, மாணவிகளின் நலனை காக்க வேண்டுமென்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
கல்லூரியில் பணியாற்றும் சில பேராசிரியர்கள் வகுப்பிற்கே வருவது கிடையாது என்றும், இதனால் மற்ற மாணவர்களின் படிப்பும் வீணாகுவது அரசுக்கு தெரிய வேண்டுமென்றும், இதனால் அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுகின்றது. இந்த புகார் குறித்து கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதும் இல்லை. கல்லூரியில் மாலை 3 மணி முதல் 6 மணிவரை விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவது எங்களது கடமை மற்றும் உரிமை என்பதனை கல்லூரி நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் கூறியுள்ளனர்.