வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 11 ஜூலை 2018 (13:16 IST)

ரஜினிக்காகவா ராகுலை சந்தித்தார் ரஞ்சித்?...

தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இயக்குனர் ரஞ்சித் சந்தித்து பேசியுள்ள விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்திக்குமாறு அழைப்பு விடுத்ததை எற்று, நேற்று டெல்லியில் ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப்  பேசினார் பா.ரஞ்சித். இருவர் சந்திப்பின்போது ராகுல்காந்தி சமீபத்தில் காலா திரைப்படத்தை பார்த்ததாகவும் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும்  தெரிவித்துள்ளார்.
 
மேலும் சாதி, மதம் போன்ற பிரிவினைகளை ஒழிக்க காலா, கபாலி, மெட்ராஸ் மாதிரியான திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை தரும் எனவும்  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இறுதியாக பா.ரஞ்சித், பேரறிவாளன் விடுதலை குறித்து ராகுல் காந்தியிடம் பேசியதாகவும், அதற்கு அவர் பேரறிவாளன்  விடுதலையில் நாங்கள் ஒரு தடையாக இருக்கமாட்டோம் எனவும், தன்னால் முடிந்தவரை அவருக்கு உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
 
ரஞ்சித்துடன் அரசியல், சினிமா மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை பேசினேன். அவரோடு பேசியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த உரையாடல் தொடரும் என நம்புகிறேன் என ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆன்மிக அரசியலை முன்னெடுத்துள்ள ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க ஏற்கனவே பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது ரஜினிக்கு நெருக்கமான ரஞ்சித் அவரை சந்தித்து பேசியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கமல்ஹாசன் ராகுலை சந்தித்தார். இப்படி தமிழகத்தின் பிரபலமானவர்களை ராகுல் சந்திப்பது அரசியல் ரீதியாகவே பார்க்கப்படுகிறது.
 
இந்த சந்திப்பு பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ரஞ்சித் “ ராகுலுடன் அரசியல்  மற்றும் கலை, சாதி, மதம், மதரீதியான அச்சுறுத்தல்கள் பற்றி பேசினேன்” என டிவிட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.