4 நாட்களுக்கும் மேலாக பிணவறையில் ராம்குமாரின் உடல்: பாதிப்படையாதா?
கடந்த 18 ஆம் தேதி, ராம்குமார், புழல் சிறையில் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்தது.
இதனை அடுத்து, ராம்குமாரின் உடல், பிரேத பரிசோதனைக்காக, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டது. இதற்கிடையே, உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தனியார் மருத்துவர் உடன் இருக்க வேண்டும் என்று வாக்குவாதம் ஏற்பட்டு, அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.
அதனால், ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் 4 நாட்களுக்கு மேலாக பிணவறையில் இருக்கிறது.
இந்நிலையில், ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய காலதாமதம் ஏற்பட்டுவதால், அவரின் உடல் நிலை மோசமைடையாதா? என்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவர், நாராயண பாபுவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது,
"ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடைய பிணவறையில் ராம்குமாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையானது, 5 டிகிரி குளிர் பதத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனால், அவரது உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தோலின் நிறத்தில் கூட வேறுபாடு ஏற்படாது. ஒரு மாத காலத்துக்கு இதே நிலையில் பராமரிக்க இயலும்.
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை நடைபெறும்.” என்றார்.