1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (14:36 IST)

மீனவ பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: இருவர் மீதான குற்றச்சாட்டு உறுதி!

ராமேஸ்வரத்தில் மீனவ பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதான பெண் சந்திரா. இவர் அப்பகுதியில் கடல்பாசியை சேகரிக்க சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் திரும்ப வராததால் கிராம மக்கள் பல பகுதிகளிலும் தேடியுள்ளனர்.
 
ஆனால் அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சந்திரா பாசி சேகரிக்க செல்லும்போது அப்பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் சிலர் அடிக்கடி அவரிடம் கேலி, கிண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
 
இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் வடமாநில தொழிலாளர்கள் 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இறால் பண்ணை அருகே உள்ள காட்டுப்பகுதியில் சந்திரா உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 
பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. பெண்ணின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த போலீஸார் 6 வடமாநில இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். அதற்கு முன்னதாக அந்த 6 பேரையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதுடன், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
 
இதனால் படுகாயமடைந்த வடமாநில இளைஞர்கள் மருத்துவமனையில் போலீஸார் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். சிகிச்சை முடிந்தபிறகே 6 வாலிபர்களிடமும் போலீசார் முழுமையாக விசாரணை நடத்தி மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும் இந்த இளைஞர்கள் பணிபுரிந்து வந்த இறால் பண்ணி லைசென்ஸ் பெறாமல் செயல்பட்டு வந்ததாக தெரிய வந்த நிலையில் பண்ணைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
 
இதில், இருவர் இவ்வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் என காவல்துறை தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் ரஞ்சன் ராணா ஆகிய இருவரும் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்து அவர் அணிந்திருந்த தங்க ஆபரணம் மற்றும் வெள்ளி பொருளை அவரிடமிருந்து கொள்ளையடித்து, அதை நகைக்கடை ஒன்றில் விற்பனை செய்ய முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.
 
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று மாலை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் கைது செய்யப்பட்ட மேலும் 4 வட மாநில இளைஞர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பதால் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.