நீங்களே ஆபத்துன்னு சொல்றீங்க! ஆல் பாஸ் போடலாமே! – ராமதாஸ் வேண்டுகோள்!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்குமாறு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி நடைபெறும் என அரசு அறிவித்தது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தேர்வுகள் நடத்தக்கூடாது என அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பான வழக்கின் மீதான விசாரணையில் தமிழகத்தில் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க உள்ளதாகவும், அதனால் பொதுத்தேர்வை இதற்கு மேலும் காலதாமதம் செய்ய முடியாது என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது, இந்த வழக்கின் மீதான தீர்ப்பு 11ம் தேதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பில் தேர்வு இல்லாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும். 11-ஆம் வகுப்பில் ஒரு தேர்வு எழுதாத அனைத்து மாணவர்களுக்கும், 12-ஆம் வகுப்பில் ஒரு தேர்வை எழுதாத 35,000 மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும்! அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கில் நோய்த்தொற்று அதிகரிக்கும் என்று அரசே எச்சரித்துள்ள நிலையில் தேர்வுகள் சாத்தியமல்ல. எனவே மாணவர்கள் நலன் கருதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்!” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.