திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 ஜூன் 2020 (11:03 IST)

திரைப்பட பாணியில் போனில் வந்த அம்முக்குட்டி: பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம்!

மதுரை வாலிபரிடம் டிக்டாக் மூலமாக ஆசை வார்த்தைகள் பேசி பணம் பறித்த இளம்பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் ராமசந்திரன். கல்லூரி மாணவரான இவர் வாட்ஸப், டிக்டாக் போன்றவற்றில் தனது நேரத்தை அதிகமாக செலவழித்து வந்துள்ளார். அப்போது டிக்டாக்கில் அம்முக்குட்டி என்ற பெயர் கொண்ட ஐடி வைத்துள்ள பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் பழக்கம் அதிகமாக பேஸ்புக் கணக்கை பகிர்ந்து அதன் மூலம் பேசி வந்துள்ளனர். அம்முக்குட்டி மீது ராமச்சந்திரன் காதலில் விழுந்த நிலையில் தனது வீட்டில் பிரச்சினை என்றும் மருத்துவ செலவுக்காக பணம் தேவைப்படுவதாகவும் அம்முக்குட்டி கூறியுள்ளார். உடனே அவரது வங்கி கணக்கிற்கு 98 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார் ராமசந்திரன்.

அதற்கு பிறகு அம்முக்குட்டி அவருடன் பேசுவதை குறைத்துக் கொண்டுள்ளார். பிறகு சுத்தமாக அவரை தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு மொபைல் உட்பட அனைத்தும் ஸ்விட் ஆப் செய்யப்பட்டுள்ளது. சந்தேகம் அடைந்த ராமச்சந்திரன் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட மதுரை போலீஸார் திருப்பூர் அருகே வீரபாண்டி அருகில் வீட்டில் பதுங்கியிருந்த அம்முக்குட்டியை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவரது நிஜ பெயர் சுசி என்பதும், டிக்டாக்கில் அம்முக்குட்டி என்ற பெயரில் பலருக்கு காதல் வலை விரித்ததும் தெரிய வந்துள்ளது.

அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.