கட்டுமான பொருட்கள் உயர்வு; அம்மா சிமெண்டை கொண்டு வாங்க! – ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழகத்தில் கொரோனா முடக்கம் காரணமாக கட்டுமான பொருட்கள் விலை உயர்வது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா முழுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே கட்டுமான பொருட்கள் விலை உயர்வை சந்தித்தன. இந்நிலையில் தற்போது மீண்டும் கட்டுமான பொருட்களின் விலை உயர தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை கடந்த சில நாட்களில் மூட்டை 370 ரூபாயிலிருந்து 520 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இது நியாயமற்றது. இது கட்டுமானத் தொழிலை நேரடியாகவும், அதன் மூலம் கட்டுமானத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை மறைமுகமாகவும் கடுமையாக பாதிக்கும்!” என கூறியுள்ளார்.
மேலும் “சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு அதிகபட்ச விலையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். மூட்டை ரூ.218 என்ற விலையிலான அரசு சிமெண்ட் (அம்மா சிமெண்ட்) விற்பனையை அதிகரித்து விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்!” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.