1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 18 செப்டம்பர் 2017 (16:32 IST)

என்ன செய்தாலும் அதிமுக ஆட்சி அகற்றப்படும்; ராமதாஸ் நம்பிக்கை

ஆளுநரும், பேரவை தலைவரும் முட்டுக்கொடுத்தாலும் சட்டத்தின் உதவியுடன் அதிமுக ஆட்சி அகற்றப்படுவது உறுதி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


 

 
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக பல அரசியல் தலைவர்கள் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
சட்டபேரைக்குள் கொறடா ஆணையை மீறி செயல்படும் பட்சத்தில்தான் சட்டப்பேரவை உறுப்பினர்களை பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்ய முடியும். கொறடா உத்தரவை 18 உறுப்பினர்களும் மீறாத நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது முறையற்றது.
 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக முதல்வரும், அவரது துதிபாடிகளும் துடித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் இத்தகைய ஜனநாயகப் படுகொலை நடத்தப்பட்டிருப்பதில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. 
 
பதவியில் தொடர்வதற்காக எந்த பாதகத்தையும் செய்ய துணிந்து விட்டது எடப்பாடி பழனிச்சாமி அரசு. உடனடியாக பதவி விலக வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஆளுநரும், பேரவைத் தலைவரும் முட்டுக்கொடுத்தாலும் கூட சட்டத்தின் உதவியுடன் இந்த ஆட்சி அகற்றப்படுவது உறுதி என்று கூறியுள்ளார்.