முதல்வர் நாற்காலி எனக்கா..? பதவி ஆசை இல்லா ரஜினிகாந்த்!!

Sugapriya Prakash| Last Modified வியாழன், 12 மார்ச் 2020 (11:57 IST)
எனக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை. நான் முதல்வர் வேட்பாளரும் இல்லை என ரஜினி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 
தான் கட்சி தொடங்குவது உறுதி என்று அறிவித்திருந்த ரஜினி, படங்களில் நடித்தவாறே அரசியல் செயல்பாடுகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனது மாவட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்திய ரஜினி, நிர்வாகிகளால் ஒரு விஷயத்தில் ஏமாற்றம் அடைந்து விட்டதாக தெரிவித்தார். அதை பிறகு சொல்வதாக கூறியிருந்தார். 
 
இந்நிலையில் இன்று லீலா பேலஸில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். கடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனது ஏமாற்றம் என்ன தற்போது தனது அரசியலுக்கு அவர் வைத்துள்ள திட்டம் என்னவென விளக்கம் அளித்தார். இதனோடு தனக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை எனவும் கூறினார். 
இது குறித்து அவர் விரிவாக கூறியதாவது, முதலமைச்சர் பதவி மீது எனக்கு ஒரு போதும் ஆசை வந்தது இல்லை. கடந்த 1996 ஆம் ஆண்டு பிரதமர் உள்ளிட்டோர் இரண்டு முறை அழைத்து கேட்டும் முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்று கூறிவிட்டேன். 
முதலமைச்சர் பதவி மீது எனக்கு எப்போதும் எண்ணம் ஏற்பட்டது இல்லை. இளைஞனாக, படித்தவனாக, தொலைநோக்கு பார்வை உள்ளவனாக இருப்பவனை முதலமைச்சராக உட்கார வைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். 
 
முதலமைச்சர் வேட்பாளராக நான் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் என்னிடம் கூறினார்கள். நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றால் என் ரசிகர்கள் கூட ஏற்கமாட்டார்கள் என்று என்னிடம் கூறினர். நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்பதை என் மாவட்டச் செயலாளர்கள் கூட ஏற்கவில்லை. 
 
இருப்பினும் எனக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை. நான் முதல்வர் வேட்பாளரும் இல்லை, நான் முதல்வர் ஆகப்போவதும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :