தொடங்கியது கோடைமழை; தணிந்தது வெயில் – மக்கள் மகிழ்ச்சி !

Last Modified சனி, 20 ஏப்ரல் 2019 (11:19 IST)
தமிழகத்தின் சில மாவட்டங்களில் கோடை மழை தொடங்கியதை அடுத்து காற்றில் ஈரப்பதம் அதிகமாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இந்தாண்டு கோடைக்காலம் வரும் முன்னரே வெய்யிலின் தாக்கம் அதிகமாகி வந்தது. நகர்ப் பகுதிகளில் வெய்யில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தொட்டுள்ளது.

அதையடுத்து மக்கள் இந்த கோடையை எப்படி சமாளிக்கப்போகிறோம் என தெரியாமல் அச்சமுற்றனர். ஆனால் இந்த ஆண்டு கோடை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியது மக்களுக்கு ஒரே ஆறுதலாக இருந்தது. அதையடுத்து கடந்த சில தினங்களாக தமிழகத்தின் சில் உள்மாவட்டங்களில் மழைப் பெய்தது.

இதையடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் உதகையில் 4 செமீ, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 3 செமீ, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, ஓசூர், நீலகிரி மாவட்டம் கெட்டி, மதுரை மாவட்டம் சோழவந்தான், சேலம் மாவட்டம் ஏற்காடு, நெல்லை மாவட்டம் சிவகிரி ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காற்றிக் ஈரப்பதம் அதிகமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளன. மேலும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் மழைப் பெய்யக்கூடும் என அறிவித்துள்ளனர்.


 இதில் மேலும் படிக்கவும் :