60 கேரவன்கள் ரெடியா… ராகுலின் 150 நாட்கள் நடைபயணம் அப்டேட்!
ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிமீ தூரம் 'பாரத் ஜோடோ யாத்திரா' என்ற பெயரில் 150 நாட்கள் நடைபயணம்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நாளை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யிலான நடை பயணத்தை தொடங்க இருக்கும் நிலையில் கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கன்னியாகுமரியில் நாளை நடை பயணம் தொடங்க இருப்பதை அடுத்து ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகிறார். இதனை அடுத்து சென்னை விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிமீ தூரம் 'பாரத் ஜோடோ யாத்திரா' என்ற பெயரில் 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார். வருகிற 7 ஆம் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து அவர் நடை பயணத்தை தொடங்குகிறார்.
நடை பயணத்தை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தேசிய கொடியை அவரிடம் வழங்கி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலுக்கு நடந்தே செல்கிறார்.
இரவு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரியில் தங்குகிறார். ராகுல் காந்தியும் அவருடன் பாத யாத்திரை செல்லும் காங்கிரஸ் தலைவர்களும் தங்குவதற்காக படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிவறை மற்றும் அனைத்து வசதிகளும் கொண்ட கேரவன்கள் பயன்படுத்தப்படுகிறது.
இதற்காக 60 கேரவன்கள் கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்திற்கு வந்துள்ளது. இந்த 60 கேரவன்களும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த 60 கேரவன்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை செல்லும் போது அவர்களை பின் தொடர்ந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலை சந்திக்கும் வகையிலும் குஜராத் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையிலும் இந்த நடைபயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பயணம் தரும் எழுச்சி காரணமாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.