வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 19 செப்டம்பர் 2016 (16:06 IST)

சிறை அதிகாரி மாற்றம் ; ராம்குமார் மரணம் : திட்டமிட்டு நடத்தப்பட்டதா?

சிறை அதிகாரி மாற்றம் ; ராம்குமார் மரணம் : திட்டமிட்டு நடத்தப்பட்டதா?

ராம்குமார் மரணம் மர்மங்கள் நிறைந்ததாகவும் பல சந்தேகங்களை எழுப்பியும் வருகிறது.


 

 
சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று மின்சாரக் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை அதிகாரிகளால் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், அவர் மரணம் அடைய வேண்டும் என்பதற்காகவே சிறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
 
முதலில், ராம்குமார் தற்கொலை செய்து கொள்ள பயன்படுத்திய மின்சார பெட்டி பழுது அடைந்திருந்ததால் திறந்து வைக்கப்பட்டிருந்தாகவும், அதிலிருந்து மின்சார கம்பியின் மூலமாகத்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சிறை அதிகாரிகளால் கூறப்பட்டது.
 
ராம்குமார் உடம்பில் பதிந்திருக்கும் லட்டியின்(தடி) அச்சுக்கு, பதிலளித்த போலீசார், அவரை காப்பாற்றுவதற்காக லட்டியால் அடித்தோம் என்று கூறினார்கள்.
 
மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் அறையில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று கூறப்பட்டது.
 
தற்போது வெளியாகியுள்ள தகவல் சந்தேகத்தை மேலும் அதிகரிப்பதாய் அமைந்துள்ளது.
 
அதாவது, ராம்குமார் அடைக்கப்பட்டிருந்த புழல் சிறையில், இரண்டு பிரிவுகளின் கீழ் கைதிகள் அடைக்கப்பட்டிருப்பார்கள். முதல் பிரிவில் தண்டனைக் கைதிகளும், இரண்டாவது பிரிவில் விசாரணைக் கைதிகளும் அடைக்கப்பட்டிருப்பார்கள். 
 
ராம்குமார், விசாரணைக் கைதிகள் இருந்த பிரிவில் அடைக்கப்பட்டிருந்தார்.  விசாரணைக் கைதிகள் இருக்கும் பிரிவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜெயிலர் (சிறை அதிகாரி) என்று யாரும் நியமிக்கப்படவில்லை. தண்டனை கைதிகள் இருக்கும் பிரிவுக்கு கூடுதல் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணக்குமார் நியமிக்கப்பட்டிருந்தார். 
 
சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகுமார், விசாரணைக் கைதிகளின் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அதன்பின் சமீபத்தில், திடீரென அவரை மீண்டும் தண்டனைக் கைதிகளின் பிரிவுக்கு மாற்றினர். அதேபோல், தண்டனை கைதிகள் பிரிவில் இருந்த ஜெயிலர் ஜெயராமன் என்பவரை விசாரணை கைதிகள் இருக்கும் பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.
 
அதன்பின்னர்தான் ராம்குமாரின் மரணம் நடந்துள்ளது. எனவே, ராம்குமாரின் மரணத்தை நிகழ்த்துவதற்காக இந்த மாற்றங்கள் சிறையில் அரங்கேறியுள்ளதா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ள விவகாரம், சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
 
ஏனெனில், ராம்குமார் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்றுதான் (செப்.19) விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது. இந்நிலையில்தான் அவரின் மரணம் நிகழ்ந்துள்ளது.
 
ஒருவேளை, அவர் ஜாமீனீல் வெளிவந்தால், பல உண்மைகளை அவர் செய்தியாளர்களிடம் கூறிவிடுவார் என்று பயந்து அவரின் மரணம் நிகழ்த்தப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.