பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணன் மரணம் – எழுத்தாளர்கள் அஞ்சலி!
எழுத்தாளரும் பதிப்பாளருமான கிரியா ராமகிருஷ்ணன் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
தமிழ் வாசகர்களுக்கு க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாளர் ராமகிருஷ்ணன் என்றால் தெரியாமல் இருக்காது. அந்த அளவுக்கு தங்கள் நூல்களின் அழகான மற்றும் பிழையற்ற புத்தக உருவாக்கத்துக்கு பெயர் போனது க்ரியா. அந்த பதிப்பகத்தின் சாதனைகளுள் ஒன்றாக தற்கால தமிழ் அகராதி இருந்து வருகிறது. சமீபத்தில்தான் இதன் திருத்தப்பட்ட மூன்றாவது பதிப்பு வெளியானது.
இந்நிலையில் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ராமகிருஷ்ணன் கொரோனாவில் இருந்து குணமானாலும் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகாததால் அபாயகட்டத்திலேயே உயிர்காக்கும் கருவிகளோடு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து தமிழ் வாசகர்களும் எழுத்தாளர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.