1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 27 ஜூலை 2022 (14:04 IST)

அப்துல் கலாம் நினைவு தினம் - பொது மக்கள் அஞ்சலி

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பேக்கரும்புவில் அமைந்துள்ள தேசிய நினைவிடத்தில் குடும்பத்தினர் மற்றும் பொது மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம், விஞ்ஞானியாக உயர்ந்தார். அக்னி நாயகனான அவரின் திறமையை பாராட்டி இந்திய நாட்டின் உயர் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற கலாம், மாணவர்கள், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். இந்நிலையில் கடந்த 2015 இதே நாளில் மறைந்தார்.

இதனையடுத்து, ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்புவில் கலாம் தேசிய நினைவிடம் கட்டப்பட்டது.நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பலர் கலாம் நினைவிடத்தை பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கலாமின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இன்று காலை கலாம் குடும்ப உறுப்பினர்கள் கலாம் தேசிய நினைவகத்தில் உள்ள அப்துல் கலாமின் சமாதியில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் மலர் வளையம் வைத்த அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து பொது மக்கள், மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், கலாம் நினைவிடத்தில் துவக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட உள் கட்டமைப்புகளை தவிர மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மற்ற புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை. குறிப்பாக அறிவுசார் மையம், டிஜிட்டல் நூலகம் உட்பட ஆராய்ச்சியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என பொது மக்கள் மற்றும் கலாம் குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.