மெரினாவில் அனுமதி மறுப்பு - பொதுமக்கள் அதிருப்தி
நீட் தேர்வு தொடர்பாக போராட்டம் நடைபெறுவதை தவிர்ப்பதற்காக சென்னை மெரினா கடற்கரைக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பாதல் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் மெரினா கடற்கரையில் எந்த போராட்டமும் நடத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.
அந்நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியின் அருகில் நேற்று சில கல்லூரி மாணவர்கள் நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால், அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
எனவே, மெரினா கடற்கரை மீண்டும் போராட்டக் களமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக, கடந்த 2ம் தேதி முதலே அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அங்கே செல்வதற்கும், கடைகளை திறப்பதற்கும் தடை நீடித்து வருகிறது.
எனவே, கடற்கரைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் காற்று வாங்க அங்கே செல்லும் சென்னை வாசிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். நீட் தேர்வுக்கான போராட்டங்கள் சீரடையும் வரை இந்த கெடுபிடி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.