பி.ஆர்.பி. நிறுவனத்தினர் சுமார் 3000 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு - ஜி.ஆர். குற்றச்சாட்டு
மதுரை மாவட்டத்தில் பி.ஆர்.பி நிறுவனத்தினர் 3865.382 ஏக்கர் நிலப்பரப்பை வாங்கி பதிவு செய்துள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது குறித்து கூறியுள்ள ராமகிருஷ்ணன், “அதிமுக ஆட்சி நடைபெற்ற 2001 - 2006ஆம் ஆண்டுகளில் 77 குத்தகை அனுமதிகளும், திமுக ஆட்சி நடைபெற்ற 2006-2011ஆம் ஆண்டுகளில் 68 குத்தகை அனுமதிகளும் வழங்கி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
கிராமங்களை விட்டு ஏழை மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற்றப்பட்டனர். மதுரை மாவட்டத்தில் பி.ஆர்.பி நிறுவனத்தினர் 3865.382 ஏக்கர் நிலப்பரப்பை வாங்கி பதிவு செய்துள்ளனர். இங்குள்ள பதிவாளர் அலுவலகங்களில் சுமார் 2807 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மிகப்பெரும் எண்ணிக்கையிலான ஏழை விவசாயிகள் நிலமற்றவர்களாக ஆக்கப்பட்டிருப்பதை சொல்ல வேண்டியதில்லை. மேற்கண்ட அட்டவணையில் உள்ளதில் மிகப்பெரும்பகுதி நிலம் 906.40 ஹெக்டேர் (2266 ஏக்கர்) நிலங்கள் பி.ஆர்.பி. கிரானைட் மற்றும் அதன் சார்பிலானவர்களுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளது.
அது தவிர தேனி மாவட்டத்தில் 868.09 ஏக்கர் நிலங்களை அவர்கள் வாங்கியுள்ளனர். இப்படி தமிழகம் முழுவதும் வாங்கப்பட்டுள்ள நிலத்தின் அளவு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஏக்கர் இருக்கலாம்.தலித் மக்களுக்கு மட்டுமேயான பஞ்சமி நிலங்கள் சட்டவிரோதமாக வாங்கப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர் குடியிருப்பே இடம் மாற்றப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள பஞ்சமி நிலங்களில் 4.3 சதவீதம் மட்டுமே இப்போது தலித்துகளிடம் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.