ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 28 மே 2016 (17:11 IST)

நாராயணசாமிக்கு எதிர்ப்பு: நமச்சிவாயம் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம்

புதுச்சேரி முதல்வராக இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்ட முன்னாள் மத்திய இணையமைச்சர் நாராயணசாமிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


 
 
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 17 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. ஆனால் யார் முதலமைச்சர் என்ற இழுபறி ஒருவார காலமாக நீடித்து வந்தது. புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி, நமச்சிவாயம், வைத்திலிங்கம் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தது.
 
இந்நிலையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் ஷீலா தீட்சித் மற்றும் முகுல் வாஸ்னிக் முன்னிலையில் இன்று நடைபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக நாராயணசாமி புதுச்சேரி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
அவர் முதல்வராக அறிவிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்ற கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதி அருகே நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் நாராயணசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் காங்கிரஸ் கொடியை கிழித்தும் போர்ரட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அரசு பேருந்துகள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
 
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல் துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல் துறையினர் தடியடி நடத்தினார். இதனால் புதுச்சேரியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.