ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2024 (21:34 IST)

பிரபல ஹோட்டலை கையகப்படுத்த அரசுக்கு தடை..! உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு.!

SRM Hotel
திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டலை அரசு கையகப்படுத்த நான்கு நாட்கள் தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
 
திருச்சி காஜாமலை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான 4.74 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 30 ஆண்டு காலம் குத்தகை அடிப்படையில் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமான எஸ்ஆர்எம் நட்சத்திர ஹோட்டல் கடந்த 1994-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. குத்தகை நிர்ணயம் தொடர்பாக எஸ்ஆர்எம் குழுத்துக்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கும் இடையே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடைபெற்று வந்தது.
 
இந்த வழக்கில், உரிய தொகையை செலுத்த எஸ்ஆர்எம் குழுமத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், குத்தகை காலம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் இன்று ஹோட்டலை கையகப்படுத்த முயன்றனர். இதற்கு ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
 
Raid
மேலும் ஹோட்டலை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி ஹோட்டல் நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று முறையிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஹோட்டலில் 80 சதவீத அறைகளில் ஆட்கள் இருப்பதாகவும், ஹோட்டலை அரசு கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 
இந்நிலையில்  ஹோட்டலை கையகப்படுத்த 4 நாட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. மனுதாரர் ஹோட்டல் நிர்வாகத்தை ஜூன் 18 மாலை வரை தொடரலாம் என்றும் இந்த தடை நீட்டிக்கப்படாவிட்டால் தானாகவே ரத்தாகிவிடும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.