ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2024 (21:21 IST)

பழனி கிரிவலம் வீதிகளில் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Madurai Court
பழனி முருகன் கோவில் கிரிவல வீதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
பழனி திருத்தொண்ட திருச்சபை நிர்வாகி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் பழனி கோவில் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
 
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, பழனி கோவில் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில் இந்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 
 
கோவில் கிரிவல வீதிகளில் வாகனங்கள் உள்ளே செல்வதை தடுக்கும் வகையில் 9 இடங்களில் இரும்பு தூண்கள் மற்றும் தள்ளும் வகையிலான தடுப்புகள் அமைக்கும் பணி 2 வாரங்களில் முடிவடையும் என்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
palani temple
பழனி முருகன் கோவில் கிரிவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் எதிர்காலத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாத அளவிற்கு நிரந்தர தீர்வுகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
மேலும் திருப்பதியை போல பக்தர்களை அழைத்து செல்ல கிரிவல வீதிகளில் பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 
தற்காலிகமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்துகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் எந்த விதமான தனியார் வாகனங்களும் கிரிவீதிக்குள் வர அனுமதி இல்லை என்றும் ஆணை பிறப்பித்தனர்.

 
சிறிய ஆக்கிரமிப்புகளை கண்டறியும் வகையில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்  என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.