1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (12:21 IST)

திடீரென பால் விலை உயர்வு; இப்படியே போணுச்சுன்னா..? – மக்கள் அதிர்ச்சி!

கடந்த சில மாதங்கள் முன்னதாக பால் விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்திய நிலையில் தற்போது சில நிறுவனங்கள் மீண்டும் விலையை உயர்த்தியுள்ளன.

தமிழ்நாட்டில் அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மற்றும் பல தனியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் தினசரி பால் பயன்பாட்டில் 16 சதவீதத்தை ஆவின் பூர்த்தி செய்கிறது. மீத 84 சதவீத பால் தேவையை தனியார் பால் நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன.

இந்நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் அடிக்கடி பால் விலையை உயர்த்தி வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டில் ஏற்கனவே மூன்று முறை பால் விலை உயர்த்தப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் மூன்றாவது முறையாக பால் நிறுவனங்கள் விலையை உயர்த்தின.


இந்நிலையில் நேற்று முதல் சில நிறுவனங்கள் நான்காவது முறையாக விலையை உயர்த்தியுள்ளன. ஜெர்சி நிறுவனம் லிட்டருக்கு ரூ.6ம், ஹெரிட்டேஜ் நிறுவனம் லிட்டருக்கு ரூ.4ம் விலையை உயர்த்தி உள்ளன. ஆரோக்கியா லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது.

இதனால் ஜெர்சி மற்றும் ஹெரிட்டேஜ் நிறுவனங்களின் பால் விலை ரூ.70 மற்றும் ரூ.72 ஆக விற்பனையாகி வருகிறது. ஆவின் பால் விலையுடன் ஒப்பிட்டால் தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.22 அதிகமாக உள்ளது. ஆவின் பால் விலை உயர்த்தப்படாத நிலையில் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edited By: Prasanth.K